ஜியோ சர்ச்சை….சிறந்த கல்வி நிறுவன தேர்வு குழுவை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு

டில்லி:

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. 3 அரசு கல்வி நிறுவனங்கள், 3 தனியார் கல்வி நிறுவனங்களை கொண்ட இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ கல்வி நிறுவன பெயரும் இடம்பெற்றிருந்தது.

ஜியோ கல்வி நிறுவனம் தற்போது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இந்த கல்வி நிறுவனம் இன்னும் தொடங்கப்படாத நிலையில் சிறந்த கல்வி நிறுவனங்களில் இடம்பிடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. பல்கலைக்கழக மானிய குழு எனப்படும் யூஜிசி சார்பில் அமைக்கப்பட்ட தேர்வு வல்லுனர் குழு மூலம் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதற்காக விண்ணப்பம் செய்த கல்வி நிறுவனங்களை முழு ஆய்வு செய்த பின்னரே இறுதியாக இப்பட்டியல் வெளியிட வேண்டும். இந்நிலையில் இந்த பட்டியல் தயாரிக்க போதுமான அளவில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு கள ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததன் அடிப்படையில் இந்த தேர்வு நடந்துள்ளது என்ற புகாரும் எழுந்தது. ஆனால், கள ஆய்வு என்பது கட்டாயமில்லை என்று தேர்வு குழு தலைவர் கோபால்சாமி தெரிவித்தார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து தேர்வு குழுவை விரிவாக்கம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டு அமை ச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் புதிய உறுப்பினர்களை இந்த குழுவில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசின் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. 2ம் கட்ட கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுவில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்கும் இந்த நடவடிக்கைக்கு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த குழு மூலம் 10 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து கொடுக்க வலியுறுத்தப்படவுள்ளது..

இந்த குழு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் ஹார்வர்டு பிஸ்னஸ் ஸ்கூல் தருன் கண்ணா, ஹாஸ்டன் பல்கலைக்கழக தலைவர் ரேணு கத்தோர், ஐஐஎம் லக்னோ முன்னாள் இயக்குனர் பிரிதம் சிங் ஆகியோர் உள்ளனர். இதில் கத்தோர், கண்ணா ஆகியோர் வெளிநாட்டில் தங்கியுள்ளனர். அதனால் இந்திய கல்வியாளர்களை இந்த குழுவில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த குழு தேவைப்பட்டால் தினமும் இயங்க செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணா, கத்தோர் ஆகியோர் சிறப்பு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் முதல் கூட்டத்துக்கு மட்டுமே இந்தியாவுக்கு நேரில் வந்தனர். அடுத்த கூட்டங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே நடந்தது. இதில் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.