வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது அரசின் கொள்கை முடிவு! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது, அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தைக் கையகப்படுத்தி அதை நினைவுச் சின்னமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்து அதற்கானி பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான பணமும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு உள்ளது.

அரசின் முடிவை  எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ், ஜெ.உயிருடன் இருந்தபோது தீபா எங்கே இருந்தார், எங்கே வசித்தார் என கேள்வி எழுப்பிய நிலையில், மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

அதைத்தொடர்ந்து, தீபாவின் மனுவை விசாரிக்க மனுவை விசாரிக்க  நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றினார். அதைத்தொடர்ந்து, வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

விசாரணையின்போது, தமிழகஅரசு வழக்கறிஞர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது, அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தார். அரசின் கொள்கை முடிவு என்பதால் அதை மறுபரிசீலனை என்ற பரிந்துரையை ஏற்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.