டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி:

டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் 27 ஆயிரத்து 654க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 761 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று முதல் ஊரடங்கில் அதிக தளர்வுகள் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் டெல்லி எல்லைகள் திறக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதே போல் உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தங்கும் விடுதிகள் மற்றும் விருந்து அரங்குகள் திறக்கப்படாது என்றும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அவற்றை வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு குறையும் வரை டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும். மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள் இந்த விதியின் கீழ் வராது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மாநில மக்களுக்காக படுக்கைகளை ஒதுக்க வேண்டியது அவசியம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஜூன் இறுதிக்குள் 15,000 படுக்கைகள் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. தற்போது மாநில அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் தலா 10,000 படுக்கைகள் இருக்கின்றன’ என கூறியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மக்கள் வருகின்றனர். அந்த மருத்துவமனைகள் எப்போதும் போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதியவர்கள் குடும்பத்தில் இருந்து விலகி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி