பெங்களூரு:

மின்னணு முறையில் பள்ளி பாட புத்தகங்களை மாற்றி அமைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் தன்வீர் சயத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மின்னணு முறையில் பாடங்களை படிப்பதை பார்வையிட்ட அவர் மேலும், கூறுகையில்,‘‘ அனைத்து பள்ளி பாட புத்தகங்களும் அரசின் இணைய தளத்தில் உள்ளது. இதை மின்னணு முறையில் படிக்கலாம். சில கல்வி நிறுவனங்கள் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து எளிமையான முறையில் மின்னணு கருவி (கிண்ட்ல்ஸ்) மூலம் பாடம் நடத்துகின்றன.

இதே வழியில் பாடம் நடத்த அவர்கள் என்னை அணுகினர். அதனால் இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அமல்படுத்தினால் கல்வி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான நிதி மதிப்பீடு குறித்த ஆய்வு பணியும், திட்டமிடல் பணியும் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலில் அரசுப் பள்ளிகளில் மட்டும் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

கர்நாடகாவில் ஒரு கோடி மாணவ மாணவிகள் உள்ளனர். ஒரு கருவியின் விலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் என்று வைத்துக் கொண்டாலும், அனைவருக்கும் இந்த மின்னணு கருவியை வழங்க ரூ. 6 ஆயிரம் கோடி செலவாகும். அரசுப் பள்ளிகளில் மட்டும் 60 லட்சம் பேர் பயில்கின்றனர்.

இந்த திட்டத்தை அமல்படுத்தினால் அரசின் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழும். இதனால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இதர சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. புத்தகங்கள் அச்சடிக்கும் நிதியை இந்த திட்டத்திற்கு திருப்பினால் நிதியாதார பிரச்னை இருக்காது.

பள்ளி மாணவ மாணவிகள் அதிக எடையில் புத்தகங்களை சுமந்து செல்வது தொடர்பாக மாநில அரசு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தெலங்கானா போன்ற மாநிலங்களில் புத்தக பைகளுக்கான எடையை வரையறை செய்துள்ளது. இது போன்ற நடவடிக்கையை கர்நாடகா அரசு செயல்படுத்த வில்லை.

எனினும் பாட புத்தகங்களை இரண்டாக பிரிக்க அரசு முயற்சி செய்தது. எனினும் புத்தக பை எடை குறையவில்லை. இதற்கு மின்னணு முறை தான் தீர்வு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.