‘அல் ஜசீரா’ ஆங்கில சேனலுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதி வாபஸ்….உள்துறை நடவடிக்கை

டில்லி:

அல் ஜசீரா ஆங்கில தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

 

இந்த அனுமதி இல்லாமல் அந்த தொலைக்காட்சி இந்தியாவில் தனது சேனலை ஒளிபரப்பை தொடர முடியாது. இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. காஷ்மீரில் தீவிரவாத செயல்பாடு தொடர்பான ஆவணப் படத்தை இந்த சேனல் தயாரித்துள்ளது. இதன் காரணமாக தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சேனல் தற்போது தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி சேனல் நிர்வாகம் சார்பில் உள்துறை அமைச்சகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்கள் செய்திகளை ஒளிபரப்ப உள்துறை அமை ச்சகத்தில் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். ஒளிபரப்பு உரிமத்தை தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வழங்கினாலும், உள்துறையில் அனுமதி மிக முக்கியமானதாகும்.

இந்த சேனலுக்கு 2010ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு மே 29ம் தேதி இது திரும்ப பெறப்பட் டுள்ளது. அஜி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் சார்பில் இந்த சேனல் நடத்தப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். உள்துறையிலும் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் இல்லை.

‘‘ஆவணப் படத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து 10 நிமிட காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், இதை உள்துறை கவனத்தில் கொள்ளவில்லை’’ என்று சேனல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஜசீரா இது போன்ற பிரச்னையை இந்தியாவில் சந்திப்பது இது முதன் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.