விஷாலிடமிருந்து தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றிய தமிழக அரசு…!

தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

நடிகர், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருந்து வருகிறார். சங்க நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி டிசம்பர் 20ம் தேதி தயாரிப்பாளர்கள் மற்றும் ஒரு சில நடிகர்கள் போராட்டம் நடத்தினர். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

சங்கத்தின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகும் விஷால் தலைவராக தொடர்கிறார். வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடி பணத்தை முறைகேடு செய்துள்ளார் என்றும் விஷால் மீது புகார் எழுந்தது. அப்போது அதிருப்தி தயாரிப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதன்படி, விசாரணை நடந்து, தயாரிப்பாளர் சங்க கணக்குகள் முறைப்படி கையாளப்படவில்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் 29ம் தேதி முதல் தமிழ் திரைப்பட் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சிறப்பு அதிகாரியே எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி