அரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி! 7ந்தேதி முதல் வேலைநிறுத்தம்?

சென்னை,

ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்  அமைப்புகளின்  73 சங்கங்கள் இணைந்த ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கடந்த மாதம் 5ந்தேதி சென்னையில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணியை நடத்தி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அவர்களின்  கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், மீண்டும் கடந்த 22ந்தேதி ஒரு நாள் அடையாள போராட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று தலைமைச் செயலகம் வந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் முடிவு எட்டப்படாததை அடுத்து, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பேசிய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இரண்டு நாட்களுக்குள் தங்களது கோரிக்கை குறித்து சாதகமான முடிவை அறிவிக்காவிட்டால், திட்டமிட்டபடி வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

 

7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின் 8ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்ட முடிவை கைவிடுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதரண சூழ்நிலையில், அரசு ஊழியர் சங்ககளின் மிரட்டல் அறிவிப்பும் தமிழகத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அரசியல் காரணங்களால் தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக   தமிழக அரசு பணிகள் முழுவதுமாக முடங்க வாய்ப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: again strike starts on 7th?, government talk with Jacto - Geo, it is failure, அரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி! 7ந்தேதி முதல் வேலைநிறுத்தம்?
-=-