​​சென்னை:

ன்று நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்த செய்திகளை ஒளிபரப்பக்கூடாது என செய்தி நிறுவனங்களை தமிழக அரசு மிரட்டி வருகிறது.

அரசு கேபிள்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் செய்தி சேனல்களை தற்காலிகமாக முடக்கி உள்ளது. மேலும்  தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்களையும், தூத்துக்குடி குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என மிரட்டல் விடுத்து உள்ளது.

செய்திகளை ஒளிபரப்பு வரும் தனியார் செய்தி சேனல்கள் வட்டாரத்தையும் அரசு மிரட்டி வருகிறது.செய்தியை நிறுத்தாவிட்டால், அரசுக் கேபிளில் சேனல் நிறுத்தப்படும் என்று மிரட்டி வருகிறது.

மத்திய அரசின் மிரட்டலை தொடர்ந்தே தமிழக அரசு செய்தி நிறுவனங்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

அரசு கேபிளில் செய்திகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்த தென்மாவட்டங்களில் பல இடங்களில் பொது மக்கள் அரசு கேபிள் அமைப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் தனியார் நிறுவனங்களின் டிஷ் வாங்கி உபயோகப்படுத்தப்போவதாக கூறி வருகின்றனர்.

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீத  போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானதை தொடர்ந்து தென்மாவட்ட மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக மேலும் இடங்களில் அரசுக்கு எதிராக வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று காலை காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து இந்த மறைமுக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.