சென்னை:

சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதிகளில் சாக்கடை கலப்பதைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.1001 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்  தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது,  அம்மாவின் தொலைநோக்கு திட்டம் 2023-ல், கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்வது ஒரு அங்கமாக அறிவிக்கப் பட்டிருந்தது.

இதனை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிடவும், நீர் வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றார்.

அதன்படி  சென்னை நதிகள் சீரமைப்பு அறக் கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதி,  பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான கால கட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, தற்போது முதல்கட்டமாக ரூ.1001 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள  மூன்று முக்கிய நீர்வழிகளான அடையாறு, கூவம் பக்கிங்காம் கால்வாயில் தினசரி  சுமார் 170 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பாய்கிறது, மாநில அரசின் ஆய்வின்படி, இதை தடுக்க முதல் கட்டமாக ரூ.1,001 கோடியை  தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, புதிய சாக்கடைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உந்தி நிலையங்களை உருவாக்க மெட்ரோவாட்டர் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 2022 க்குள் நிறைவடையும்.

இந்த திட்டத்திற்கு மாநிலத்தின் பட்ஜெட் ஆதரவு தவிர, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகர மேம்பாட்டு பணி ஆகியவை நிதியளிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

கூவத்தில் கொட்டப்போகும் ரூ.1001 கோடி நிதியால் கூவம் சுத்தப்படுத்தப்படுமா அல்லது ஸ்வாகாவா?  என்பது போகப் போகத்தான் தெரியும்