டெல்டா மாவட்டத்தில் சட்டக்கல்லூரி தொடங்க அரசு ஒத்துழைக்கும்! சட்டமன்றத்தில் அமைச்சர் பதில்

சென்னை: டெல்டா மாவட்டத்தில், தனியார் சட்டக்கல்லூரி தொடங்க அரசு ஒத்துழைக்கும் என்று தமிழக சட்ட அமைச்சல் சி.வி.சண்முகம்  சட்டமன்றத்தில் அமைச்சர் பதில் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.இன்று காலை கேள்வி நேரத்தின்போது, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி,  டெல்டா மாவட்டங்களில் எங்கும் சட்டக் கல்லூரி இல்லை; எனவே இங்கு அமைத்தால் இந்தப் பகுதி மக்கள் பயனடைவார்கள், எனவே சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா என  கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ இதற்கு முன்பு 7 சட்டக் கல்லூரிகள் இருந்தன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பு ஏற்றபின் தமிழ்நாட்டில்  மேலும் புதிதாக 6 சட்டக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

ஒவ்வொரு சட்டக்கல்லூரிக்கும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 14 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. மேலும் ஒரு சீர்மிகு சட்டப்பள்ளி செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.  எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் முதலமைச் சரின் ஆலோசனையின் பேரில் பரிசீலனை செய்யப்படும்.

சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க யாராவது முன்வந்தால் அனுமதி தர அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு   சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.