சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தர முடியாது என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.


சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து இந்து அமைப்பினர் போராட்டங்களில் இறங்கினர்.
இதையடுத்து தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.


அதே நேரத்தில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு தொடரும் என்றும் கூறியது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.


இதையடுத்து, வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து உள்ளனர். பாதுகாப்புக்காக 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்கு வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம் என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறி இருக்கிறார்.


இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: சபரிமலைக்கு பெண்களை அழைத்து வர அரசு முயற்சி எடுக்காது. 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்கு வந்தால் பாதுகாப்பு வழங்கப்படாது.
தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்துகளை கேட்டிருக்கிறோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிப்போம் என்றார்.