புதுடெல்லி: நிலத்தடி நீரின் கையிருப்பு மற்றும் அளவுக்கதிகமான பயன்பாடு குறித்த கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு (குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்கள்) திட்டங்களின் மீது ‘தண்ணீர் சேமிப்பு கட்டணம்’ விதிப்பது குறித்த பரிந்துரைகளை உருவாக்கியுள்ளது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

இதில் கவனிக்கத்தக்க மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிலத்தடி நீர் பயன்பாட்டு விதிமுறைக்குள் முதன்முறையாக வேளாண்மையும் கொண்டுவரப்பட்டுள்ளதுதான்.

அடுத்த 50 ஆண்டுகளுக்கான 45 விதிகள் அடங்கிய பத்தாண்டு செயல்திட்டங்களைக் கொண்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. இவற்றில் பல குறுகியகால பரிந்துரைகளும் உண்டு. இந்த அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் அடுத்த மாதம் கூட்டப்படவுள்ளது. அக்கூட்டத்தில் நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் ஒழுங்குமுறை தொடர்பாக விரிவான விஷயங்கள் விவாதிக்கப்படும்.