மத்திய-மாநில அரசுகள் உதவுமா? கூலி வேலை செய்யும் வருங்கால தங்கமங்கை! உதவுபவர் யார்?

1yoga-1

உதவிகளை  எதிர்பார்க்கிறார் வருங்கால வீராங்கனை சிந்துஜா. யோகாவில் பல பரிசுகளை வென்றுள்ள சிந்துஜா அடுத்து ஜிம்னாசியம் கற்க விரும்புகிறார். உதவிக்காக காத்திருக்கிறார்… 

மதுரை டால்பின் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் சிந்துஜா. இவர் இரண்டுவயது குழந்தையாக இருக்கும்போதே கம்பியை பிடித்து தலைகிழாக தொங்குவது, கால்களை அகலமாக விரித்துக்கொண்டு கேரம் விளையாடுவது உடலை வில்லாக வளைப்பது என்று சாகசங்கள் புரிய ஆரம்பித்தார். எல்லாம் இயல்பாகவே வந்தது சிந்துஜாவுக்கு. மதுரையில் புறவழிச்சாலையில் குடியிருக்கும் இளங்கோ-சித்ரா தம்பதியினரின் ஒரேமகள் சிந்துஜா.

விளையாட்டு போட்டிகளில்வென்றுவிட்டால், அந்தவீரருக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசுகளும் வந்து குவிகின்றன. ஆனால் எத்தனையோ திறமையாளர்கள், அவர்களின் திறமைகளை வெளிக்கொணர போதிய வசதியின்றி தங்களுக்குள்ளேயே மாய்த்துகொள்கிறார்கள்.

ஒருசிலரே  எந்தவித உதவியும் இன்றி , மாரியப்பன்களாக, மாலிக்களாக தடுமாறித்தான்  வெற்றியின் இலக்கை அடைகிறார்கள். அவர்களை நாம் கொண்டாடுகிறோம்…

சரி.. ஆனால் அதேபோல் எத்தனையோ திறமையாளர்கள் வெளித் தெரியாமல் உள்ளார்களே அவர்களை ஊக்குவிக்க நமது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறதா என்றால்… இல்லை…

ஆனால், ஒருசில சமுக அமைப்புகள் சிலரை கை தூக்கி விடுகிறது. அதுபோல  வெற்றிக்காக ஏங்கும் இதுபோன்ற ஏழைகளுக்கு நாம் உதவலாமே….

அப்படி ஆதரவுக்கரங்களை எதிர்பார்த்து நிற்கிறார் வருங்கால தங்கமங்கை சிந்துஜா!

இவரதுபள்ளி விளையாட்டு ஆசிரியர்தான் சிந்துஜாவின் திறமையை உணர்ந்து, யோகா கற்க உதவினார்.  யோகாவில் தீவிர நாட்டம் உள்ள சிந்துஜாவுக்கு சுரேஷ் என்ற யோகா மாஸ்டர் பயிற்சி அளித்து வருகிறார். யோகா தொடர்பான எந்த போட்டிக்கு சென்றாலும் இவருக்கு பரிசு நிச்சயம்.

இதுவரை சிந்துஜா கலந்துகொண்டுள்ள  மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 43 முதல் பரிசுகளும், 4 இரண்டாவது பரிசுகளும், 4 மூன்றாவது பரிசுகளும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் தனலட்சுமி பராம்பரிய கலை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கவிழாவில் 45 நிமிடத்தில் 350 விதமான ஆசனங்களை செய்துகாட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த  சாதனையை  லிம்கா புக்ஆப் ரிக்கார்டுக்கு  பதிவு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

சிந்துஜாவின் அப்பா இளங்கோ லேத்பட்டரை ஒன்றில் கூலிவேலை பார்க்கிறார். சிந்துஜா, போட்டிக்காக எங்கு செல்ல வேண்டுமானாலும் ஆயிரமோ இரண்டாயிரமோ கடன் வாங்கித்தான் அனுப்புகிறார். பண பிரச்சினைகளால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தும் வருகிறார்.

இதன் காரணமாக மாநில அளவிலான போட்டிகளிலும், சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார்.

அரசு அல்லது தனியார் அமைப்புகள் உதவிகரம் நீட்டினால் வரும் காலத்தில்  இந்தியா இன்னொரு தங்கமகளை தமிழ்நாட்டில் இருந்து பார்க்கலாம் என்பது உறுதி.

சிந்துஜாவுக்கு, யோகா தவிர பரதநாட்டியம், கராத்தே, ஒவியம் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.

தற்போது ஜிம்னாசியத்தின் பக்கம் சிந்துஜாவின் ஆர்வம் திரும்பியிருக்கிறது .ஆனால் அதற்கு மதுரையில் யாரிடம் பயிற்சி பெறுவது என்பதை அறியாமல் தவிக்கிறார். உரிய முறையில் ஜிம்னாசிய பயிற்சி பெற்றால், நிச்சயம் உலக அளவிலான போட்டிகளில் பதக்கம்பெற்று நம்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் சிந்துஜா.

ஜிம்னாசிய பயிற்சி பற்றி அறிந்தோர் சிந்துவின் தந்தை இளங்கோவனுக்கு சொல்லுங்கள்.

அவரது செல்எண்: 9843144141.

மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் யோகாவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் இதுபோன்ற வறுமையில் வாடுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களின் வாழ்வும் உயரும், இந்தியாவின் மதிப்பும் உயரும்….

கவனிக்கப்படுவாரா சிந்துஜா… பார்ப்போம்.