திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பாக, கேரள அரசு இயற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் அம்மாநில ஆளுநர்.
கேரளாவில், கொரோனா தடுப்பு பணிகளுக்கான முதல்வர் நிவாரண நிதிக்குப் பயன்படுத்தும் வகையில், அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
இதன்படி 6 மாதங்களுக்கு, இந்த சம்பளப் பிடித்தம் செய்யப்படவுள்ளது. ஆனால், இந்த சட்டத்திற்கு அம்மாநில அரசு ஊழியர்களின் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு, கேரள ஆளுனர் ஆரீப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கேரள தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள், இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.