கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகையே பன்வாரிலாலின் ஆய்வு: நாஞ்சில் சம்பத்

நாகர்கோவில்,

ரண்டு நாட்கள் கோவை பகுதியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக ஆய்வு மேற்கொண்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிடிவி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறும்போது, தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தவே, தற்போது கவர்னரின் ஆய்வு ஒத்திகையாக நடைபெறுகிறது என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழக கவர்னர் அரசு நிர்வாகத்தில் அத்துமீறி செயல்படுகிறார். மாநிலத்தின் கவர்னர் என்பவர் சட்ட விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டும் என்றார்.

மேலும், இதுவரை இல்லாததற்கு  மாறான நிலை தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. தற்போதைய கவர்னர் பன்வாரிலாலின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அரசின் செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு நடத்தி உள்ளார். கவர்னரின் செயல்பாட்டை தமிழக அரசும், அமைச்சர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

தமிழக அமைச்சர்கள் மத்திய பாரதிய ஜனதா  அரசின் எடுபிடிகளாக செயல்பட தொடங்கி பல காலம் ஆகி விட்டது என்றார்.

மேலும், தமிழக மீனவர்கள்மீதான இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,

தமிழக மீனவர்களை இதுவரை சிங்கள ராணுவம் மட்டுமே தாக்கி வந்தது. இப்போது இந்திய ராணுவம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இனிமேல், இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தை சேர்ந்தவரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமானவர் மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேச வேண்டும். இல்லையேல் மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்படும் என்றார்.

வருமான வரித்துறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சம்பத்,

தமிழகத்தில் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் விளையாட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.