சென்னை,

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நாளை சசிகலா பதவி ஏற்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதிமுகவினர் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா 9ந்தேதி முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி வந்தது. அதற்காக அண்ணா நூற்றாண்டு மண்டமும் தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் பதவி ஏற்பதில் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதால், பதவி ஏற்பு விழா திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பொறுப்பு ஆளுநர் தரப்பில் இருந்து, பதவியேற்பு விழா எப்போது நடத்தப்படும் என்பது பற்றி உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. வித்யாசாகர் ராவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், சசிகலா பதவி ஏற்பது ஏதாவது சட்ட சிக்கல்களை உருவாக்குமா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பதவி ஏற்க முடியாமல் பெரும் குழப்பத்தில் சசிகலா குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.