சென்னை,

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவை, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசினார்.

அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கும், தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

ஆட்சியை கைப்பற்ற தனக்கே ஆதரவு என்று சசிகலா கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார். தற்போதைய தமிழக முதல்வர் ஓபிஎஸ் தனக்கே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது, !அதை சட்டமன்றத்தில் நிருபிக்க தயார் என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக எந்தவொரு முடிவும் எடுக்காமல், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் மத்தியஅரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து டிஜிபி ராஜேந்திரனுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று காலை தமிழக தலைமை செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் கவர்னர் மாளிகை வந்துள்ளார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து தலைமைச்செயலாளருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதேபோல் உளவுத்துறை கூடுதல் தலைவர் தாமரைக்கண்ண னும் ஆளுநரை சந்தித்து வருகிறார்.

 

கவர்னர் தமிழக அரசின் உயர்அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.