இலவச அரிசி திட்டத்தை காலம் தாழ்த்தும் கிரண்பேடி : நாராயணசாமி புகார்,

புதுச்சேரி,

புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல்  வேண்டுமென்றே கவர்னர்  கிரண்பேடி காலம் தாழ்த்தி வருவதாக புதுவை முதல்வர்  நாராயணசாமி புகார் கூறி உள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இலவச அரிசி திட்டத்தில் வேண்டுமென்றே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.  மேலும்,  இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கிரண்பேடி கூறுவது அப்பட்டமான பொய் என்றும்,  ஆளுநர் கிரண்பேடி மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர் என செயல்படுவதாக கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வரின் இலவச அரிசி குறித்து ஏற்கனவே தெரிவித்துள்ள ஆளுநர் கிரண்பேடி, ”இலவச அரிசிக்கான திட்டத்தை நான் தடுக்கவில்லை என்றும், ; எனக்கு தமிழ் மொழி தெரியாததால் என்னால் இதை விளக்கி மக்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்,  உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தகவல் பெறும் உரிமை சட்டத்திலும், ஆளுநர் மாளிகையில் தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கம் பெறாலம்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.