ஆளுநரின் திடீர் சோதனை :அச்சமடையும் உத்திரப்பிரதேச அதிகாரிகள்

ஆளுநரின் திடீர் சோதனை :அச்சமடையும் உத்திரப்பிரதேச அதிகாரிகள்

.

லக்னோ

 

உத்திரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் நடத்தும் திடீர்  சோதனைகளால் உத்திரப்பிரதேச அரசு அதிகாரிகள் பயந்துள்ளனர்.

 

உத்திரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்திபென் படேல் முன்பு  குஜராத் முதல்வராகப் பதவி வகித்துள்ளார். அத்துடன் அவர் அதற்கு முன்பு மோடியின் அமைச்சரவையில் பங்கு பெற்றவர் ஆவார். இம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்காணிக்க இவரை மத்திய அரசு இம்மாநில ஆளுநர் ஆக்கியதாகக் கூறப்பட்டது. ஏனெனில் உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் அளிக்கும் அதிரடி உத்தரவுகளால் பல அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஆளுநராகப் பதவி ஏற்றுள்ள ஆனந்திபென் படேல் ஆரம்பம் முதலே பல திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி அது குறித்த கேள்விகள் கேட்டு வந்தார். இதனால் அவர் அரசு விவகாரத்தில் தலையிடுவதாகவும் இது புதுச்சேரி  மாநிலத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே நடக்கும் அதிகாரப் போருக்கு ஒப்பானது எனக் கருத்துக்கள் எழுந்தன. ஆளுநர் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கும் திட்டங்கள் குறித்து மட்டுமே ஆய்வு நடத்துவார் எனக் கூறப்பட்டதால் சர்ச்சைகள் அடங்கின.

 

ஆனால் மாநிலம் முழுவதும் ஆனந்திபென் திடீர் சோதனைகளை தற்போது  மேற்கொண்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பாரபான்கி மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தி உள்ளார். அப்போது அங்குள்ள பெண் மாணவிகள் தங்களிடம் ஒரு சில ஆண்கள் குறும்பு செய்வதாகக் கூறி உள்ளனர். அதற்கு ஆனந்திபென், “நீங்கள் பயமின்றி இருக்க வேண்டும். மற்றவர்களின் பாதுகாப்பை நம்பி இருக்கக் கூடாது. நீங்கள் உங்களிடம் குறும்பு செய்யும் ஆண்களைக் கல்லால் அடித்து விரட்ட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

 

அத்துடன் அதே மாவட்டத்தில் உள சுகாதார நிலையங்களுக்குச் சென்று அங்கு  அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்து ஊழியர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் மாநிலங்களில் உள்ள அங்கன்வாடிகள், அரசு மருத்துவமனைகள், காவல்நிலையம், முதியோர் இல்லம் ஆகிய இடங்களிலும் திடீர் சோதனை நடத்தி உள்ளார். பள்ளி மாணவர்களிடம் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை அளித்து மாணவர்கள் தாங்கள் காணும் அநீதிகளைக் குறித்து புகார் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அத்துடன் இவ்வாறு புகார் அளித்த பிறகு அந்தப் புகாரின்  நிலை அறியக் காவல்நிலையங்களுக்குச் சென்று விசாரிக்க வேண்டும் எனவும் அங்கு தங்களின் அனுபவம் குறித்து கட்டுரைகள் எழுத வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தி உள்ளார். அவ்வாறு எழுதப்படும் கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

தனது திடீர் சோதனைகள் ஏற்கனவே தாம் மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த  போது நடத்தியவைகளே என ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆயினும் உ பி அரசு அதிகாரிகள் இந்த திடீர் சோதனைகளை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

 

உ.பி. மாநில மூத்த காவல் அதிகாரி, “ஒரு ஆளுநர் என்னும் முறையில் அவர் இவ்வாறு ஒரு அரசியல்வாதியைப் போல் நடக்கக் கூடாது. ஏற்கனவே நாங்கள்  முதல்வர் மற்றுமுள்ள அமைச்சர்களின் திடீர் சோதனையால் அச்சமடைந்துள்ளோம். ஆளுநரின் திடீர் சோதனை எங்களுக்கு மேலும் அச்சமூட்டுகிறது.. அதிகாரிகள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையை இந்த சோதனைகள் உண்டாக்குகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.