தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். அதே நேரம், அவருக்காக காத்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் சசிகலா ஆதரவாரளர்களை கவர்னர் சந்திப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தமிழக ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், அக்கட்சி எம்.எல்.ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் விரைவில் முதல்வர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவர் பதவி ஏற்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்த தற்போதைய  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடுமென சசிகலா மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தான் பதவி விலகப்போவதில்லை எனவும், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இந்த வாரம் வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பதவி ஏற்பு விழாவுக்காக சசிகலா தரப்பு காத்திருந்த வேளையில், தமிழகத்துக்கு வருவதைத் தவிர்த்து வந்தார் கவர்னர். “தீர்ப்பு வரஇருக்கும் நிலையில்  அவருக்கு பதவிப்பிரமாணம் செய்யலாமா” என்று சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை தமிழக தலைநகர் சென்னைக்கு கவர்னர் வருகிறார். மாலை ஐந்து மணிக்கு, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திப்பார் என்றும், இரவு ஏழரை மணிக்கு சசிகலாவை சந்திப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரம், கவர்னர் இன்று ஒபி.எஸ்ஸை மட்டும் சந்திப்பார் என்றும் சசிகலாவை சந்திக்க மாட்டார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

அதாவது, “குடியசு தலைவரை சந்திக்க டில்லி புறப்பட்ட சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பயணத்தை ரத்து செய்தனர். கவர்னர் சென்னை வருகிறார் என்ற தகவல் கிடைத்ததாலேயே இந்த முடிவு என்று சொல்லப்பட்டது.

ஆனால், எம்.எல்.ஏக்கள் டில்லி வந்தாலும் குடியரசுத் தலைவரை சந்திக்க முடியாது என்று அங்கிருந்து தகவல் வந்ததாலேயே இவர்கள் பயணத்தை ரத்து செய்தனர்.

மேலும், “ஓ.பி.எஸ். தொடர்ந்து முதல்வராக இருக்கட்டும்.  இல்லை என்றால், குதிரை பேரம் நடப்தை தடுக்கும் விதமாக தமிழக சட்டசபை  சில மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என்றும் சசிகலா தரப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில்தான் கவர்னர் சென்னை வருகிறார். ஆகவே இன்று மாலை அவர், முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திப்பது உறுதி. ஆனால்  இரவு ஏழரை மணிக்கு  சசிகலாவை சந்திக்கமாட்டார்” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.