சென்னை:

மிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீரென  அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை 6 மணி அளவில் தன்னை சந்திக்க ராஜ்பவனுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது முதல்வர் எடப்பாடி சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், ஸ்டாலினை ஆளுநர் அழைத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக ஆளுநரின் ஆய்வுக்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளுநரின் திடீர் அழைப்பு அரசியல் விமர்சகர்களின் புருவங்களை உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வரும் நிலையில், 18எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வந்துள்ள முறைகேடுகள், சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் போன்ற விவகாரங்களும் பூதாகாரமாக வெடித்துள்ளது.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, ஓஎன்ஜிசி எதிர்ப்பு என தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும்  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கா.மே.வா. அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகளும் மாவட்டந்தோறும் மத்திய மாநில அரசுக்கு எதிராக  போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அதிமுக எம்.பி.க்கள் கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றனர்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையையும் எடுக்காத மத்திய அரசுக்கு எதிராக செயல்பட வேண்டிய அடுத்தக்கட்ட முடிவு குறித்து, வரும் 30ந்தேதி திமுக செயற்குழு கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசோ, வரும் 29ந்தேதி வரை உச்சநீதி மன்ற கெடு இருப்பதாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்ல தயங்கி வருகிறது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், இன்று மாலை 6 மணியளவில் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஸ்டாலின், ஆளுநர் சந்திப்பு நடைபெற உள்ளது.

முதல்வர் சென்னையில் இல்லாத நிலையில், ஆளுநர் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை திடீரென சந்திக்க அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.