காஷ்மீரில் 10 ஆண்டில் 4வது முறையாக கவர்னர் ஆட்சி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஆளும் பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக இன்று விலகியது. இதனால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 4வது முறையாக காஷ்மீர் கவர்னர் ஆட்சியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ்-பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்த போது குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.

அமர்நாத் நில விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டணி உடைந்தது. இதனால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

காஷ்மீரில் பாஜக – பிடிபி கூட்டணி ஆட்சியின் போது முப்தி முகம்மது சயீத் 2016ம் ஆண்டு ஜனவரியி-ல் மரணமடைந்தார். சயீத்தின் மகள் மெகபூபா முப்தி முதல்வராக பாஜக எதிர்ப்பு தெரிவித்தால் கவர்னர் ஆட்சி அமலானது. தற்போது பாஜக-பிடிபி கூட்டணி முறிந்துள்ளதால் 10 ஆண்டுகளில் 4வது முறையாக கவர்னர் ஆட்சியை காஷ்மீர் மக்கள் சந்திக்கவுள்ளனர்.