“ஆளுநர் உரை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை” என்று தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“ஆளுநர் உரை முரண்பாடுகள் நிறைந்த – ஏமாற்றத்தையே தருகிற – கொள்கைக் குறிப்புகள் எதுவுமில்லாத வெற்றறிக்கையாகவே உள்ளது.
ஆளுநர் அவர்கள் இன்று (16-6-2016) படித்த உரை – வெறும் சம்பிரதாய உரையாக – வழக்கம் போல அ.தி.மு.க. ஆட்சியின் “அம்மா” திட்டங்களை பட்டியலிடும் புராணமாக – சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைச் சந்தித்த போது வைத்த கோரிக்கைகளையே மீண்டும் நினைவுபடுத்திச் சொல்லும் உரையாகத் தான் உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்திற்கான அறிவிப்புகள், இந்த உரையில் இடம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, தேர்தல் அறிக்கையில் கூறிய அறிவிப்புகளில் முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களே தவிர, புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத உரையாக இருப்பது அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
7karunanidhi1
இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, முல்லைப் பெரியாறு, நதி நீர் இணைப்பு, கச்சத் தீவு போன்ற பிரச்சினைகள் 20-1-2016 அன்று ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்ட உரையில் இடம் பெற்ற பிரச்சினைகளாகும். மின்மிகை மாநிலமாக தமிழகம் ஆகி விட்டதாக ஆளுநர் உரையிலும் கூறப்பட்டுள்ளது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. ஒவ்வொரு நாளும் நாளேடுகளைப் பிரித்தால், மின்தடை காரணமாக பல மணி நேரம் மக்கள் அவதி என்று செய்திகள் வந்து கொண்டே உள்ளன.
அது போலவே தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகள் பற்றியும், புதிய வேலை வாய்ப்புகள் பற்றியும் ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஆளுநர் உரை முரண்பாடுகள் நிறைந்த – ஏமாற்றத்தையே தருகிற – கொள்கைக் குறிப்புகள் எதுவுமில்லாத வெற்றறிக்கையாகவே உள்ளது” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.