கோவிந்தா… கோவிந்தா….! ஸ்ரீரங்கம், பார்த்தசாரதி உள்பட பெருமாள்கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருப்பதி ஏழுமலையான்  கோவில்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில் களில் இன்று வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு,  அதிகாலை  கோவிந்தா… கோவிந்தா…. நாமகரணத்துடன் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

சொர்க்க வாசலுக்கு மற்றொரு பெயர் பரமபத வாசல் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த பக்தி மிகு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இன்றைய நாளில் சொர்க்க வாசலை கடந்து சென்றால், மரணித்த பிறகு வைகுண் டத்தை  அடையலாம்  என்பது ஐதீகம். இதை மெய்ப்பிக்கும் விதமாக ஆண்டு தோறும் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி என்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

இன்றைய தினம் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் முதலில்,  பெருமாள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் அந்த வழியாக கோயிலை சுற்றி வருவார். அதைத்தொடர்ந்தே பக்தர்களும் சொர்க்க வாசல் வழியாக வந்து தங்களது பிறவிப்பயனை பெறுவார்கள்.

அதன்படி திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கினர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.டலழகர் பெருமாள் .

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். ரத்தின அங்கி, வைர பூணூல், கிளி மாலையுடன் நம்பெருமாள் காலை 5.30 மணியளவில் பரமபத வாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். ஸ்ரீரங்கநாதர் இன்று இன்று இரவு வரை  ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.

ஸ்ரீரங்கத்த்தில் பரமபத வாசலை கடந்த எம்பெருமான்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நள்ளிரவு 12 .05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவமூர்த்திகள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நள்ளிரவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதிகாலையில் கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்த பெருமாள், சொர்க்கவாசல் வாயிலில் காத்திருந்த நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.

இந்த வைபவத்தை தொடர்ந்து வெங்கடகிருஷ்ணன் பார்த்தசாரதி ஆனந்த விமானத்தில் எழுந்தருளினார். இரவு முழுவதும் காத்திருந்த பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.