டில்லி

டும் வெப்பம் காரணமாக அரசு மக்களுக்கு பல அறிவுரைகள் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகம் பதிவாகும் இடங்களில் பல இந்திய நகரங்கள் இடம் பெறுகின்றன. நேற்று ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் 50.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. உலகெங்கும் பதிவான வெப்ப அளவுகளில் இதுவே மிக அதிகமாகும். இது மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது.

வட இந்தியாவில் பல இடங்களில் குறிப்பாக உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், விதர்பா, மத்தியப் பிரதேசம், அரியானா, சண்டிகர் மற்றும் டில்லி ஆகிய பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கடும் ஆல் காற்று வீசும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,”அனல் காற்று மனித உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் மதிய வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செலும் போது குடை, தொப்பி அல்லது தலையில் ஒரு துண்டு போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். நிறைய நீர் பருக வேண்டும். அத்துடன் உப்பு சேர்க்கப்பட்ட லஸ்ஸி, எலுமிச்சை சாறு, பழ ரசம் போன்றவைகளையும் பருகலாம்.

தர்பூசணி, வெள்ளறிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அடிக்கடி குளிப்பது, மின் விசிறி, ஏர் கூலர் மற்றும் ஏசி மூலம் அறையை குளிர்விப்பது போன்றவையும் அவசியமாகும். இந்த கோடை காலத்தில் காபி, தேநீர் மற்றும் மது ஆகியவைகளை பருகக் கூடாது.” என அறிவுறுத்தபப்ட்டுள்ளது