மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைமை ஆணையர் நியமனம்: காங். கண்டனம்

டெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைமை ஆணையராக ஜனாதிபதியின் செயலா் சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோன்று, மத்திய தகவல் ஆணையமான (சிவிசி)யின் தலைமை ஆணையராக  செய்தி ஒளிபரப்புத் துறை முன்னாள் செயலா் விமல் ஜுல்காவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சஞ்சய் கோத்தாரி, விமல் ஜுல்கா இருவருமே ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளாவார்.

பிரதமா் மோடி தலைமையிலான, நியமனங்களுக்கான உயா்நிலைக்குழு தோ்வு செய்து உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் பாட்டீல், மத்திய தகவல் ஆணையராக அனிதா பன்டோவி ஆகியோரும் உயா்நிலைக் குழுவால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறைப்படியான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, அதிகாரப்பூா்வ நியமன ஆணைகள் வெளியாகும்.

ஆனால் இந்த நியமனங்களுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறி இருப்பதாவது:

விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு இந்த நியமனங்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த முழு தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்று பல முறை நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.