டில்லி

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

தற்போது உலகெங்கும் கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது.   இந்தியாவில் அதிகபட்சமாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மட்டுமே சுத்தீகரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.    இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப் படுத்த  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வை மற்றும் உள்ளூர் வரிகளை குறைத்து ஜி எஸ் டியின் கீழ் கொண்டு வர அரசு முயற்சி செய்தது.   ஆயினும் அதனால் மாநில அரசுகளுக்கு வருவாய் குறையும் என எதிர்ப்பு வந்ததால் அந்த முயற்சி முளையிலேயே கருகிப் போனது.

தற்போது பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதாலும்,  வரும் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதாலும் எண்ணெய் நிறுவனங்களை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.    இதனால் ஏற்படும் இழப்பை சிறிது காலத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பொரேஷன் மறுத்துள்ளது.    மற்ற எண்ணெய் நிறுவனங்கள் இது குறித்து எதுவும் கூற மறுத்து விட்டன.     கடந்த 2014 தேர்தல் சமயத்தில் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என வாக்களித்ததும் ஆனால் விலை கடுமையாக ஏறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.