டெல்லி: சிக்கன நடவடிக்கையாக இனி காலண்டர், டைரி, பேப்பர் போன்ற பொருட்கள் டிஜிட்டலாக மாற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் ஒவ்வொரு அரசு துறையிலும் பேப்பர் காலண்டர், டைரி, குறிப்புகள் எழுத பேப்பரால் தயாரிக்கப்படும் நோட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவைகளை அச்சடிக்க அதிக செலவு பிடிக்கும்.

ஆகையால், இந்த நடைமுறையை கைவிட வேண்டும், டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து வலியுறுத்தி வந்தது. இந் நிலையில் இனி காலண்டர், டைரி போன்றவைகள் அச்சடிக்கப்படமாட்டாது. டிஜிட்டல் முறை பயன்படுத்த வேண்டும் மத்திய அரசு கூறி உள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (பொதுத்துறை நிறுவனங்கள்) காலண்டர்கள், டைரிகள் மற்றும் திருவிழா வாழ்த்து அட்டைகள் போன்ற பொருட்களை அச்சிடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

எனவே, மேற்கண்ட செயல்பாடுகளுக்கு டிஜிட்டல் அல்லது ஆன்லைன் முறையைப் பயன்படுத்த புதுமையான வழிகளைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அனைவரும் வழிநடத்தப்பட வேண்டும்.

இது அரசாங்கத்தின் அச்சிடும் நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை குறைப்பதையும், டிஜிட்டல் கருவிகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.