மக்கள் நியாயமாக வைத்திருக்கும் பணத்தில் கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை இருக்கிறதா?

மக்கள் நியாயமாக வரிகளை செலுத்தி வங்கியில் வைத்திருக்கும் பணத்தை இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடெல்லாம் விதிக்க மத்திய அரசுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதா? என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் எந்த உரிமையும் அரசுக்கு கிடையாது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

atm_q

ஹரியானா மாநிலம் குர்கான் நகரில் வங்கி வாசலில் காத்து கிடக்கும் மக்கள் (Photo Credit: Hiindustan Times)

முன்னாள் வங்கி அதிகாரியும், வருமானவரி தொடர்பான ஆலோசகருமான யுதிஸ்டர் சர்மா, ஒவ்வொரு ஆறு மாதமும் 50 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் சொல்லுகிறது. ஆனால் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடு எதுவும் இல்லை. அப்படியிருக்க அரசு இவ்வளவுதான் பணம் எடுக்க வேண்டும் என்று சொல்ல அதற்கு உரிமையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் மக்கள் சட்டப்படி வைத்திருக்கும் நியாயமான பணத்தில் “நீங்கள் வாரத்துக்கு 24 ஆயிரம்தான் எடுக்க வேண்டும்” என்று கட்டுப்பாடு விதிக்க அரசாங்கம் யார்? என்ற கேள்வியை உச்சநீதி மன்றத்தில் எழுப்பினார். அரசின் இந்த கெடுபிடிகள் இந்திய நாட்டின் சராசரி குடிமகனுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை கேள்விக்குறியாக்குகிறது என்று குறிப்பிட்டார்.

வருமான வரித்துறையை சார்ந்த பொருளாதார நிபுணரான பிரதீப் தாரா “அரசின் இந்த நடவடிக்கையே சட்ட விரோதமானது! இதற்கு அரசியல் சட்டத்தில் இடமே இல்லை, ஒருவருடைய வருமானத்துக்கும் பலமடங்கு அதிகமான பணத்தை திடீரென்று வங்கியில் செலுத்தினால்தான் அது கேள்விக்குரியது மாறாக 2.5 லட்சத்துக்கு மேல் டெப்பாசிட் செய்தால் 200% என்ற நடவடிக்கை முற்றிலும் தவறு” என்கிறார்.

அதே கருத்தை ஆமோதிக்கும் விதமாக வருமானவரிச் சட்ட நிபுணர் கவிதா ஜா, கடந்த இரு ஆண்டுகளின் வருமானத்தை விட அசாதாரணமான அளவு அதிகமாக இவ்வாண்டு வருமானம் இருந்தால்தான் அங்கு விசாரணை செய்யவே வாய்ப்பு உருவாகிறது. அதைவிடுத்து 2.5 லட்சத்துக்கு மேல் டெப்பாசிட் செய்தால் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமில்லை என்கிறார்.