வாட்ஸ்அப் செயலியை இரவு நேரம் அரசு மூடச் சொல்லவில்லை : செயலி நிர்வாகம் மறுப்பு

டில்லி

ரவு நேரங்களில் வாட்ஸ்அப் செயலியை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்திக்கு செயலி மறுப்பு தெரிவித்துள்ளது.

சமூக வலை தளங்களில் கடந்த இரு தினங்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த செய்தியில், ”தினமும் மத்திய அரசு வாட்ஸ் அப் செயலியை இரவு 11.30 முதல் காலை ஆறு மணி வரை மூட உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் யார் யார் செய்திகள் அனுப்புவதை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த செய்தியை உடனடியாக நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிர வேண்டும். அப்படி பகிர வில்லை என்றால் உங்கள் கணக்கை நாங்கள் 48 மணி நேரத்தில் நீக்கி விடுவோம். எனது வார்த்தையை அலட்சியம் செய்ய வேண்டாம். அப்படி செய்யவில்லை எனில் உங்களால் மீண்டும் கணக்கை துவக்க முடியாது. நீங்கள் மறுபடி துவக்க விரும்பினால் அதற்கு உங்கள் நெட் பில்லுடன் ரூ.499 கூடுதலாக செலுத்த வேண்டும்.

படங்கள் பதிவது குறித்து தெரியாமல் இருப்பதை நாங்கள் அறிவோம். அதற்கான மேம்படுத்தல் பணி நடந்து வருகிறது. அது விரைவில் சரி செய்யப்படும். மோடியின் அணிக்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிப்பதற்கு நன்றி. வாட்ஸ் அப் விரைவில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நீங்கள் இந்த செயலியை அடிக்கடி பயன்படுத்தினால் அதற்காக கவலைப் பட வேண்டாம். இதற்கு நீங்கள் தினம் குறைந்தது 50 பயனாளிகள் உடனாவது செய்திகளை பகிர்ந்தால் போதுமானது. நீங்கள் இந்த செய்தியை 10 பேருக்கு அனுப்பி அதை அவர்கள் பெற்று விட்டால் உங்கள் வாட்ஸ் அப் சின்னம் நிறம் மாறும். இந்த செய்தியை 8 பேருக்கு அனுப்பி இருந்தால் புதிய வாட்ஸ் அப் செயலியை நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

வரும் சனிக்கிழமை அன்று காலை முதல் வாட்ஸ் அப் செயலி கட்டண செயலியாக மாறுகிறது. உங்களுக்கு இந்த செய்தியைஅனுப்ப குறைந்தது 10 பேர் இதே செயலியில் இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் தகவல்கள் அனுப்புவதன் மூலம் நீங்கள் அடிக்கடி செயலியை பயன்படுத்துபவார் ஆகி விடுவீர்கள். அப்போது அந்த செயலியின் சின்னம் நீல நிறமாகும். அதன் பிறகு நீங்கள் இலவச உறுப்பினர் ஆவீர்கள். “ என குறிப்பிடப்பட்டிருந்தது.

பலராலும் பரவப்பட்டதால் பயனாளிகள் மிகவும் பயந்துள்ளனர். வாட்ஸ் அப் செயலி நிர்வாகம் இதை பொய் செய்தி என மறுத்துள்ளது. வாட்ஸ் அப் இரவு 11.30 மணி முதல் காலை 6 வரை மூடப்போவதில்லை எனவும் அரசு அவ்வாறு உத்தரவிடவிலை எனவும் செயலி தெரிவித்துள்ளது. தங்களது இணையதளம், பிளாக் போன்றவற்றில் அதிகாரபூர்வமாக வராத எந்த செய்தியையும் நம்பி ஏமாற வேண்டாம் என பயனாளிகளை வாட்ஸ் அப் எச்சரித்துள்ள்து.

கார்ட்டூன் கேலரி