மைசூரு: கொரோனா சிகிச்சைப் பணியிலிருந்த மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மைசூரு ஜில்லா பஞ்சாயத்து சிஇஓ மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மைசூரு நகரிலுள்ள மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியதை எடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 20ம் தேதி, நஞ்சன்குட் சுகாதார அதிகாரி டாக்டர்.நாகேந்திரா தற்கொலை செய்துகொண்டதற்கு, ஜில்லா பஞ்சாயத்து சிஇஓ பொறுப்பில் இருக்கும் பிரஷாந்த் குமார் மிஸ்ராவின் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

“என் மகனுக்கு சக்திக்கு அதிகமாக சிஇஓ பொறுப்புகளை ஒதுக்கினார். கடந்த ஜனவரியிலிருந்தே கொரோனா தொடர்பான பணியில் ஈடுபட்டு வந்தார் என் மகன். தனக்கான டார்க்கெட்டை நிறைவுசெய்யவில்லை என்றால், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஇஓ மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு தன் உயரதிகாரிகளை நாகேந்திரா அணுகியபோதும், அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று புகாரளித்துள்ளார் தற்கொலை செய்த மருத்துவரின் தந்தை.