மறைந்த நர்ஸ் பிரிசில்லா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி கருப்புபட்டையுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்…

சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் பிரிசில்லா  மரணம் சர்ச்சைக்குரிதாக கூறப்படும் நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாளை  அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் கருப்பு பட்டை போராட்டம் நடத்தப் போவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தை  தமிழக மருத்துவ கூட்டமைப்பு  முன்னெடுத்து உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்ஸ் பிரிசில்லா உடல்நலமின்றி மரணம் அடைந்தார். ஆனால், அவரது மரணம் கொரோனாவால் நிகழ்ந்தது என அவரது குடும்பத்தினர் கூற, மருத்துவ மனை நிர்வாகமோ, அவர் ஏற்கனவே பல நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் காரணமாகவே இறந்தார் என்று மறுத்துள்ளது.

இந்த சர்ச்சைக்ளுக்கிடையில், நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா  குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜோன் மேரி பிரிசில்லா  குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும், கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி மருத்துவ கூட்டமைப்பு  சார்பில் நாளை அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி