காஞ்சிபுரம்

ற்போது நடந்து வரும் அத்தி வரதர் விழாவை ஒட்டி காஞ்சி நகர சுற்றுலா மற்றும் பட்டுப் புடவைகள் விற்பனையை முன்னேற்ற அரசு தவறி விட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ சாமி கோவிலில் குளத்தினுள் உள்ள அத்தி வரதர் விக்ரகம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு 48 நாட்கள் மக்கள் தரிசனம் செய்கின்றனர்.  கடந்த ஜூலை முதல் நடைபெறும் இந்த விழாவுக்கு  லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.     இந்த பக்தர்களுக்கான வசதிகள் சிறிதும் அரசால் ஏற்பாடு செய்யப்படவில்லை என மக்கள் குறை கூறி வருவதை ஏற்கனவே பதிந்துள்ளோம்.

காஞ்சிபுரம் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.   குறிப்பாக இந்த பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளன.   அத்தி வரதர் தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு இந்த கோவில்களைப் பற்றி சுற்றுலாத்துறை எவ்வித அறிவிப்பும் செய்யாமல் உள்ளது.   அத்துடன் காஞ்சிபுரம் என்றாலே பட்டுச் சேலைகள் என இந்த நகரம் பெயர் பெற்றுள்ளது.   ஆனால் அது குறித்தும் எவ்வித ஒரு அறிவிப்பும் எங்கும் காணப்படுவதில்லை.

இது குறித்து காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியாளர்கள், “இவ்வளவு பெரிய நிகழ்வை எவ்வாறு நடத்துவது என்பதை மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் ஆகியோர் சிறிதும் திட்டமிடவில்லை.   அதே போல் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுற்றுலாத் துறை மற்றும் பட்டு விற்பனையை முன்னேற்ற அந்த துறை இயக்குநரும் தவறி விட்டார்.     இந்த 48 நாட்கள் விழாவில் சரியான தகவல்கள் மற்றும் விளம்பரம் அளித்து இவற்றை அரசு செய்து இருக்கலாம்.

ஆனால் அரசை பொறுத்த வரை எந்த ஒரு செலவையும் செய்ய மனமின்றி உள்ளது.  எங்களில் பலரின் விற்பனை அகங்கள் கோவிலுக்கு வெகு அருகில் உள்ளன.  ஆனால் கூட்டத்தை கையாள அரசு சரியான நடவடிக்கைகள் செய்யாததால் எங்களால் மக்களை எங்கள் கடைகளுக்கு வரவழைக்க முடியவில்லை   நகருக்கு இவ்வளவு கூட்டம் வந்தும் ஒரு சில பெரிய கடைகளை தவிர மற்ற கடைகளில் வர்த்தகம் குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.