29 இன்சூரன்ஸ் மற்றும் 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளம் பயன்படுத்த அரசு அனுமதி

டில்லி

த்திய நிதித்துறை அமைச்சகம் 29 இன்சூரன்ஸ் மற்றும் 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

ஆதார் அட்டை அடையாளம் அளிக்க வேண்டியது பல அரசுத் துறைகளுக்கு அவசியமா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.    இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு எனப் பல கருத்துக்கள் நிலவி வருகின்றன.   ஆதார் என்பது ஒருவரின் தனி உரிமை எனவும் அதன் விவரங்களை வெளியிடுவது தேவையற்றது எனவும் பல ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சகம் இரு அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.  அதில் மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   பங்குச் சந்தைகளில் சிறு மற்றும் சில்லறை முதலீடு செய்பவர்கள் தங்கள் அடையாளத்தை அளிக்க இது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக 29 இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும்  ஆதார் அடையாளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இது தனி மனித சுதந்திர பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்த வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மேலும் இந்த ஆதார் அடையாளம் மூலம் போலி காப்பீடு கோரிக்கைகள் முழுவதுமாக நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி