கொரோனா பரிசோதனைக்கு ஸ்கேன் செய்வது குறித்து அரசு அதிகாரிகள் கவலை

சென்னை

கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் சோதனைக்குப் பதில் ஸ்கேன் செய்துக் கொள்வது குறித்து தமிழக அரசு சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்து கண்டறியப்படாததால் பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதற்கு ஆர்டி – பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது.   ஆனால் இந்த சோதனையை தவிர்க்கப் பல மருத்துவமனைகள் மட்டும் நோயாளிகள் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்துக் கொள்கின்றனர்.

சிடி ஸ்கேன் சோதனையில் நோயாளிக்கு அதிக சிரமம இருக்காது எனவும் விரைவில் முடிவுகள் வரும் எனவும் கூறப்படுகிறது.   ஆனால் இதனால் அரசுக்கு நோயாளிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவருவதில்லை.   ஆகவே கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் தொடர்பு விவரங்கள் கண்டறியப்பட்டு அவர்களை சோதிக்க முடிவதில்லை

இது குறித்து தமிழக பொதுச் சுகாதார இயக்குநர் மருத்துவ கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவ சேவை இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் சிடி ஸ்கேன் மூலம் பிசிஆர் சோதனைகள் தவிர்க்கப் படுவதாகத் தெரிய வந்துள்ளதாகவும். இதனால் தொடர்பு விவரங்கள் சரிவரத் தெரியாமல் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே இவ்விரு இயக்குநர்களும் ஸ்கேன் செய்து கொண்ட நோயாளிகளின் விவரங்கள், குறிப்பாக கொரோனாவுக்காக சோதனை செய்து கொண்டவர்கள் விவரங்களை அனுப்புமாறு அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஸ்கேன் மையங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவரங்களை தெரிவிக்காத ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்,”சில இடங்களில் மக்கள் நேரடியாக ஸ்கேன் சோதனை செய்து கொள்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.  நாங்கள் கொரோனா உறுதி ஆனவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  பல இடங்களில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களே சோதனை செய்து கொள்ளாததால் அவர்கள் மூலம் மேலும் பரவ வாய்ப்புள்ளது” என எச்சரித்துள்ளார்.

இது குறித்து சுகாதார அதிகாரிகள், “பலரும் தங்களுக்கு தாங்களே மருத்துவம் பார்த்துக் கொண்டு சரியாகாவிடில் ஸ்கேன் செய்து அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.  இதனால் கால தாதம் அதிகரிக்கிறது.  சரியான நேரத்தில் ஜுரம், சளி, இருமல் உள்ளோர் பரிசோதனை செய்து கொண்டால் குறைந்தது அறிகுறி உள்ளோருக்கு உடனடியாக சிகிச்சை தொடங்க முடியும்” என தெரிவித்துள்ளன்ர்.