டில்லி:

நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1815 ஆக உயர்த்தி மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேற்று  பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  அதனுடன் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 3.7சத உயர்த்துவதற்கு  அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தற்போது வரை குவிண்டாலுக்கு  ரூ.1,750 ஆக இருந்த ஆதரவு விலை ரூ.1,815 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  கூறும்போது,  “2019-20-ம் நிதியாண்டில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ1,815 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது குவிண்டாலுக்கு ரூ.65 அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.120-ம், கேழ்வரகுக்கு ரூ.253-ம் உயர்த்தப்பட்டு  இருப்பதாகவும், துவரம் பருப்புக்கு ரூ.215ம், பாசி பருப்புக்கு ரூ.75,ம்  உளுந்துப் பயிர்களுக்கு ரூ.100ம் குவிண்டாலுக்கு  அதிகரிக்கப்பட்டுள்ளது.

நி க்கடலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.200-ம், சோயாபீன்ஸுக்கு ரூ.311-ம் உயர்த்தப்பட்டுள்ளது.நடுத்தர ரக பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.105-ம், நீளப் பருத்திக்கு ரூ.100-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.