உள்ளூர் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்க அரசு ஆலோசனை

மும்பை

பொதுத்துறை  வங்கிகளுடன் உள்ளூர் வங்கிகளை இணைக்க அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்க உள்ளதாக அறிவித்தது.   இந்த மூன்று பொதுத்துறை வங்கிகள் இணைப்பினால் ஒரே ஒரு பெரிய வங்கியாக இருக்கும் என பொருளாதார ஆர்வலர்கள் இதை வரவேற்றனர்.    மேலும் ஒரே நிர்வாகத்தின் கீழ் வருவதால் நிர்வாகச் செலவுகள்,  ஊழியர் பற்றாக்குறை அல்லது அதிக அளவில் ஊழியர்கள் உள்ள நிலை ஆகியவை சமன் ஆகும் என அரசு அறிவித்தது.

தற்போது நாட்டில் பிராந்திய உள்ளூர் வங்கிகள் என சுமார் 56 பெரிய வங்கிகள் உள்ளன.    இவைகளில் 36 வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கலாம் என பொருளாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது.    இந்த வங்கிகளில் ஒரு சில வங்கிகள் ஆட்கள் பற்றாக்குறையும் ஒரு சில வங்கிகளில் அதிகமான ஊழியர்கள் உள்ளதுமாக இருக்கிறது.

இந்த வங்கிகள் பிராந்திய உள்ளூர் வங்கிகள் விதி 1976 இன் கீழ் தொடங்கப்பட்டவை ஆகும்.   இந்த வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கவும்,  நலிந்தோர் மற்றும் விவசாய ஊழியர்களுக்கு தனிநபர் கடன் வழங்கவும் உருவாக்கப்பட்டவை.    கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த வங்கிகள் தனது சொந்த முயற்சியில் நிதியை ஏற்படுத்திக் கொள்ள உரிமை அளித்து விதிகள் மாற்றப்பட்டன.

தற்போது இந்த வங்கிகளில் மத்திய அரசுக்கு 50%, மாநில அரசுக்கு 35% மற்றும் சம்மந்தப்பட்ட  பொதுத்துறை வங்கிகளுக்கு 15%  என பங்குகள் உள்ளன.   தற்போது அரசு இதை முழுமையாக பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறது.