சென்னை

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அரசை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதா நிலையில் இருந்ததில் இருந்தே நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது.  இந்த சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தக் கோரி நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

கடந்த சில காலமாக நடிகர் சித்தார்த் நாட்டு விவகாரம் குறித்துப் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.  இன்று அவர் தனது டிவிட்டரில், “முதலில் அவர்கள் இஸ்லாமியர்களை  பிரிப்பார்கள். அதன் பிறகு கிறித்துவர்கள், அதன் பிறகு மற்ற மதங்கள், அதன் பிறகு அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரை ஓரம் கட்டுவார்கள்.

அதன்பிறகு மெதுவாகப் பெண்கள் உரிமைக்கு வருவார்கள்.   அவர்கள் பிரிவினையை நடத்த ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பார்கள் அவர்கள் வெறுப்புக்காக மற்றொரு வழியைக் கண்டு பிடிப்பார்கள். இதுதான் அவர்கள் வழியாகும்.  பாசிசத்துக்கு மறுப்பு தெரிவியுங்கள்.  இந்தியாவைக் காப்பாற்றுங்கள்” எனப் பதிந்துள்ளார்.

மற்றொரு பதிவில் சித்தார்த், “பொருளாதாரத்தைப் பற்றி இப்போது எத்தனை பேர் பேசுகிறார்கள் எனப் பாருங்கள்.  திசை திருப்புதல், மோசடி மற்றும் மறுப்பு.  இவை அனைத்தும்  பாசிச வாதிகளின் ஆயுதங்கள்.  ஜாக்கிரதை,  பாசிசத்துக்கு எதிராக செயல்படுங்கள். சரியானவற்றுக்குப் போராடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.