டில்லி

னி ஜம்மு  காஷ்மீரில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி அளிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது.

மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   அத்துடன் மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர், லடாக் என  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.  நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு காஷ்மீர் மறு சீராய்வு உத்தரவை வெளியிட்டது.  அதில் வேலைவாய்ப்பு விதியில் ஒரு புதிய அம்சத்தை அரசு இணைத்துள்ளது.

அதன்படி இனி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப்பணிகளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

அந்த உத்தரவில், ”ஜம்மு காஷ்மீர் பகுதியில் 15 வருடங்கள் வசித்தவர் அல்லது 7 வருடங்கள் அங்கு கல்வி பயின்றவர் மற்றும் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வை அங்குள்ள கல்வி மையத்தில் கற்றுத் தேர்வு எழுதியவர்கள் அல்லது மாநிலத்தில் இருந்து வெளியேறியவர் எனப் பதிவு செய்யப்பட்டவர் ஆகியோர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்,

ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு அதிகாரிகள், அகில இந்தியப் பணியாளர்கள், அரசு நிறுவனங்கள், மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புக்கள், சட்ட அமைப்புக்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், உள்ளிட்ட இடங்களில் 10 வருடங்களுக்குக் குறையாமல் பணி புரிந்தவர்களின் குழந்தைகளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள்.

இந்த உத்தரவு அரசின் அனைத்து கெஜட்டட் மற்றும் கெஜட்டட் அந்தஸ்து இல்லாத அனைத்துப் பணிகளும் மற்றும் நான்காம் நிலை பணியாளர்களுக்கும் பொருந்தும் ” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.