டில்லி

ஜி எஸ் டி கணக்குகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அளிக்க அனுமதி அளிக்க அரசு  ஆலோசித்து வருகிறது.

தற்போதைய ஜி எஸ் டி சட்டத்தின்படி அனைத்து வர்ததக நிறுவனங்களும் தங்களின் ஜி எஸ் டி கணக்குகளை மாதத்துக்கு ஒரு முறை அளித்தாக வேண்டும்.   ஆனால் சிறு, மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு இது அதிகப்படியான வேலைச்சுமையை கொடுக்கிறது.    இதற்காக தனியே ஒருவரை வேலைக்கு அமர்த்துவதும், அவருக்கு ஊதியம் அளிப்பதும் மேலும் செலவையும் அதிகரிக்கிறது.   இதனால் மாதம் ரூ. 20 லட்சத்துக்கு குறைவாக வர்த்தகம் செய்வோர்  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதை அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.   மேலும் இதனால் ஏற்படும் சாதக, பாதகங்களைப் பற்றியும் அரசு ஆலோசித்து வருகிறது.   மேலும் அரசின் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்திய பிறகே இதை ஜி எஸ் டி கவுன்சில் அமுல்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க நிதி அமைச்சர்  அமித் மிஸ்ரா ரூ.75 லட்சத்துக்கு குறைவாக வர்த்தகம் புரிவோருக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு அளிக்க அனுமதி அளிக்கவேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.   ஆனால் அரசு அதிகாரிகள் பல பெரும் நிறுவனங்கள் தங்கள் கணக்கை மாதாமாதம் அளிக்கும் போது அந்த நிறுவனங்களுக்கு உதிரிப் பொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கணக்கு வழங்கினால்,  இரண்டையும் சரிபார்ப்பது கடினம் என கூறி உள்ளனர்.  ஆனால் அரசு அனைத்து நிறுவனங்களுக்குமே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு வழங்க அனுமதித்தால்,  அது தொழில் முனைவோருக்கு மட்டுமின்றி அரசுக்கும் உதவியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.