13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்தன: அதிர்ச்சி புகார்!

Govt may have made 135 million Aadhaar numbers public: CIS report

நாட்டில் 13 கோடி ஆதார் அட்டைகளின் தகவல்கள் கசிந்திருப்பதாக பெங்களூருவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

சென்டர் பார் இன்டர்நெட் அன்ட் சொசைட்டி எனற அமைப்பு இதுதொடர்பான ஆய்வை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான நான்கு இணையதளங்களின் டேஷ்போர்டு எனப்படும் பதிவேற்றம் செய்யப்படும் பகுதிகளில் இருந்து இந்தத் தகவல்கள் கசிந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

‘ஆதார் சேவையின் தகவல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 4 அரசு இணையதளங்களில் இருந்து ஆதார் தகவல்கள் கசிந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், ஆந்திர அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் சந்திரண்ணா பீமா திட்டம் ஆகிய நான்கு திட்டங்களுக்கான இணைய தளங்களில்  பதிவேற்றப்பட்டிருந்த ஆதார் தொடர்பான அனைத்துத் தகவல்களும் கசிந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 13 முதல் 15.5 கோடி வரையிலான ஆதார் தகவல்கள் கசிந்திருப்பதாக இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட அம்பேர் சின்ஹா, சீனிவாசா கோடாலி ஆகிய இரு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு எண்களும் இதன் மூலம் கபளீகரம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த இணையதளங்களை உரிய துறையினர் போதிய பாதுகாப்புடன் பராமரிக்காததாலேயே ஆதார் எண்கள் கசிந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து (UIDAI (Unique Identification Authority of India) ) இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கோரி அனுப்பியும், அந்த அமைப்பிடமிருந்து உரிய பதிலை அளிக்கவில்லை என்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ள லைவ் மின்ட் செய்தி இணையதளம் தெரிவித்துளது.