மின்சாரத்தில் இயங்கும் வாகன விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

டில்லி:

மின்சாரத்தில் இயங்கும் வாகன விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் காரணமாக பெட்ரோல், டீசல் கார்களுக்கான வரியை உயர்த்தவும்  மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விதத்தில் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய முடிவு செய்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம், பேம் திட்டத்தின் கீழ் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குபவர்களை  ஊக்கமளிக்கும் வகையிலும்,  அரசாங்கத்திற்கு ஏற்படும்  கூடுதல் நிதி சுமையைத் தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று நம்புகிறது

நிதி அமைச்சகத்தால் பேம் (Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles (FAME)   திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிறைவேற்று நிதிக் குழுவிற்கு  வழங்கிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மின்சார வாகனங்களின் ஊக்குவிப்பிற்கு ஊக்கமளிக்கும் செயலாகும். இதுகுறித்து நடைபெற்ற மதிப்பாய்வை தொடர்ந்து,   இதற்காக 2022-23ம் ஆண்டு வரை ரூபாய் 9,381 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கனரகத் தொழில்துறையின்  கோரிக்கையை மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே டாடா, மஹிந்திரா போன்ற வாகன  நிறுவனங்கள் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. ஆனால் இந்த கார்கள் குறித்த விழிப்புணர்வு  மக்களிடம் இன்னும் ஏற்படாத நிலையில், பெட்ரோல், டீசல் கார்களே விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில்,வால்வோ நிறுவனம் எலக்ட்ரிக் பஸ்சை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது  மாருதி சுசுகி நிறுவனமும் இணைந்துள்ளது.

2020ம் ஆண்டுமுதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  2030 ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவும் அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.  மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் மின்சார கார்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது.