டெல்லி:

பரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்று நீதிபதி ரோஹின்டன் நாரிமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கேரளாவில் பதற்றம், போராட்டம் என மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  63 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கான்வில்கர் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தனர்.  ஆனால், ரோஹின்டன் நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து வழக்கு 7பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.சிவக்குமார் ஜாமின் ரத்து செய்யக்கோரிய மனுமீதான விசாரணையின்போது, அமலாக்கப் பிரிவு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ரோஹின்டன், குடிமக்களின் உரிமை குறித்து நீங்கள் அணுகுவது சரியான முறை அல்ல என்று தெரிவித்தார்.

இந்த விசாரணையின்போது ஆஜரான மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், நீதிபதி ரோஹின்டன் நாரிமன் பேசுகையில், ” சபரிமலை விவகாரத்தில் நாங்கள் வழங்கிய தீர்ப்பைக் கவனமாக உங்கள் அதிகாரி களைப் படிக்கச் சொல்லுங்கள். எங்களுடைய தீர்ப்பில் விளையாட்டுத்தனம் கூடாது. அரசியலமைப்புப் பிரிவு 141 குறித்து நீதிமன்றம் என்ன தெரிவித்துள்ளது என்பதை படித்து பார்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இதில், விதிமுறை மீறல் நடப்பதை அனுமதிக்க மாட்டோம்” என கண்டிப்புடன் கூறினார்.