Random image

அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும்: அமர்தியா சென்

போல்பூர்:

மேற்குவங்காளம் சாந்திநிகேதனில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய, பிரபல பொருளாதார நிபுணரான அமர்தியா சென், அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான  அமர்தியாசென், தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் உள்ள  சாந்திநிகேதனுக்கு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்றார்.

அவர் வருவதை தெரிந்த அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமின்றி, பொதுமக்களும், குழந்தைகளும் திரளாக திரண்டு வந்து கடும் வெப்பத்தையும் மீறி போல்புர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் செய்து வரும் பிரட்டிச்சி இந்தியா டிரஸ்டின் பள்ளி நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, கல்வியின் மதிப்பு குறித்து உரையாற்றிய சென், நாட்டில் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும் என்றும், அரசுகள் கல்வி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தான் ஆரம்ப கல்வியை வங்காள மொழி அரசு பள்ளியில் படித்ததாக தெரிவித்த சென், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் அரசு நடத்தும் பள்ளிகள் உதவி வருவதாகவும்,  அரசு பள்ளிகளில் படித்த லட்சகணக்கான பேர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு  முன்னேறி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசு நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் ஆகிய இரண்டும் மேம்படுத்தப்பட  வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து சென், சாந்திநிகேதனில் உள்ள தனது குடும்பத்தினருடன் 3 நாட்கள் தங்கி இருக்கப்போவதாகவும் தெரிவித்துஉள்ளார்.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அமர்தியா சென் மேற்கு வங்காளத்தில் சாந்திநிகேதன் நகரில் ஒரு வங்காள பைத்யா குடும்பத்தில் பிறந்தவர். போல்பூர் அவரது பிறப்பிடமும் மட்டு மல்லாமல், அவர் கல்வி கற்ற இடமுமாகும்.