தட்டுப்பாடு – இறக்குமதிக்கு அரசு அனுமதியளித்தாலும் உடனடியாக பருப்பு விலை குறையுமா?

சென்ன‍ை: புத்தாண்டில் ஜனவரி 1 முதல் பருப்பு மற்றும் பயறு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் அவற்றின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை காரணிகளால், உளுந்து, துவரை மற்றும் பாசிப் பயறு உள்ளிட்டவற்றின் வழக்கமான விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால், அவற்றின் வரத்து குறைந்ததால், வழக்கம்போல் விலையும் ஏறியது.

எனவே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு 1.5 லட்சம் டன் அளவிற்கு உளுந்து இறக்குமதி செய்ய அனுமதியளித்தது. மேலும், பாசிப்பயறு இறக்குமதிக்கும் இதைப்போலவே அனுமதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்ய அனுமதியளித்தாலும், அவை துறைமுகங்களுக்கு வந்து, சந்தையை அடைவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் வரை ஆகும் என்பதால், அடுத்த சில வாரங்களுக்கு பருப்பு மற்றும் பயறுகளின் விலை குறையாது என்றே கூறப்படுகிறது.

தைப்பொங்கல் நெருங்கும் நிலையில், பாசிப்பயறு தட்டுப்பாடு ஏற்பட்டால், அதன் விலையை பதுக்கல்காரர்கள் கடுமையாக ஏற்றிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.