வாகன உற்பத்தி தொழிலுக்கு ஜிஎஸ்டி சலுகை வழங்க அரசு விரும்பவில்லையா?

டில்லி

நலிந்து வரும் வாகன உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி சலுகை வழங்க அரசு விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருமளவில் குறைத்துள்ளனர். அத்துடன் இந்த உற்பத்திக் குறைவால் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வாகன முகவர்கள் பலர் தங்கள் விற்பனை நிலையத்தை மூடி வருகின்றனர். இதனால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி வாகன உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு வரியில் சலுகை வழங்குவதால் வாகனங்களின் விலை குறைந்து விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் எளிய வட்டியில் கடன் வசதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது வங்கிகளில் நிதி ஓட்டம் குறைவாக உள்ளதால் எளிய வட்டியில் வாகனக் கடன்கள் வழங்குவது கடினம் என வங்கி நிர்வாகம் அரசுக்குத் தெரிவித்துள்ளது. ஆனால் அரசு வங்கிகளை வாகனக் கடன் வழங்குவது குறித்து மேலும் ஆலோசனை செய்து கடன் வழங்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஜி எஸ் டி வரிச்சலுகை அளிப்பதற்கு அரசுக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது ஜிஎஸ்டி வரி வசூல். குறைந்து வருகிறது. அரசு எதிர்பார்த்த அளவை விட மிகவும் குறைவாகவே ஜிஎஸ்டி வசூல் உள்ளது. இந்நிலையில் வாகன விற்பனைக்கு ஜி எஸ் டி சலுகை அளிப்பதால் அரசுக்கு மேலும் வருமானக் குறைவு உண்டாகும் என்பதால் இவ்வாறு தயங்குவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அது மட்டுமின்றி இதைப் போல் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கேட்டபடி ஜிஎஸ்டி சலுகை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன் மூலம் கட்டிட விற்பனை அதிகரிக்கவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நாட்டின் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்களின் விலைக் குறைந்தாலும் விற்பனை அதிகரிக்க அதிகம் வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Govt, GST concession, not accepring, sales down, vehicle
-=-