யூசி பிரவுசர், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை

டில்லி

ந்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.

சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே சீனாவுக்கு எதிரான அலை இந்தியாவில் எழுந்து வருகிறது.   அகில இந்திய வர்த்தக சம்மேளனம் சுமார் 500க்கும் அதிகமான சீனப்பொருட்களை கொள்முதல் செய்யவோ விற்கவோ கூடாது என வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.  பல மாநில அரசுகள் சீன நிறுவனங்களுக்கு அளித்துள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன.

 

இந்நிலையில் இந்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன மொபைல் செயலிகள் மூலம் பல தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.  எனவே இவற்றை தடை விதிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளன.

 எனவே இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விதி எண் 69ஏ வின் அடிப்படையில் 59 மொபைல் செயலிகளைப்  பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.   இந்த செயலிகள் இந்திய ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றுக்கு எதிராகச்  செயல்பட்டு  வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.  அதைக் கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.