சென்னை:

மிழகத்தில் உள்ள மருத்துவர்களில் 20 பேர் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.50 ஆயிரம் பணப்பரிசும்  வழங்கப்படும். இதற்கான விழா இன்று மாலை நடைபெறுகிறது.

மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் தமிழகஅரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி 2018ம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசு மருத்துவர்கள்  16 பேருக்கும், தனியார் மருத்துவர்கள் 4 பேருக்கும் என மொத்தம் 20 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்படுகிறது.

இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுடன் 50 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்பட உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர்கள் விருதுக்கு உரியவர்களை கண்டறிய தமிழக சுகாதாரத்துறையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தேர்வு செய்துள்ள மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது வழக்கப்பட உள்ளது.

மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனு ரத்னா, உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாரதி, சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நீலா கண்ணன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஆனந்தகுமார், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் அருணாகுமாரி ஆகியோர் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், மருத்துவக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றி வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் திருநாவுக்கரசு, சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலீஸ்வரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ரேடியோ டயாக்னசிஸ் துறை பேராசிரியர் தேவிமீனாள், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் சிறந்த மருத்துவர் விருதைப் பெறுகின்றனர்.

பொதுமருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மருத்துவர் மேஜர் சிவஞானம், விழுப்புரம் மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், சென்னை மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்புத்துறை மருத்துவர் விடுதலை விரும்பி, திருப்பத்தூர் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பசுபதி, திருப்பூர் குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீதாராணி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் பணியாற்றி வரும் தேனி சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவர் முத்தமிழ்செல்விக்கும் விருது வழங்கப்படுகிறது.

இவர்கள் தவிர, தனியார் துறையில் பணியாற்றி வரும் குரோம்பேட்டை டாக்டர் ரேலா மருத்துவமனை மருத்துவர் பிரபாகரன், கோவை விஜிஎம் மருத்துவமனை மோகன் பிரசாத், சென்னை அப்பல்லோ முதன்மை மருத்துவமனை செங்கோட்டுவேலு, திருச்சி ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சென்னியப்பன் ஆகிய நான்கு பேரும் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று மாலை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலையில் நடைபெறும் விழாவில் தங்கமுலாம் பூசப்பட்ட வெண்கல பதக்கத்துடன் கூடிய சிறந்த மருத்துவர் விருது, பாராட்டுச்சான்றிழ் ஆகியவற்றுடன் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்கப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்குகிறார்.

விருது பெற்றுள்ள மருத்துவர் தனபால், சொந்த ஊர் நாமக்கல். சுமார்,  30 ஆண்டுகளாக மருத்துவத்து றையில் பணியாற்றி வருகிறார். தற்போது சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். எம்எஸ் பொது அறுவை மருத்துவரான இவர், பொதுசுகாதாரத்துறை மற்றும் மருத்துவப்பணிகள் துறைகளின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 15 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளார்.

அதையடுத்து, கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவக்கல்வி இயக்ககத்தின் கீழ் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

அதுபோல பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அனுரத்னா,  விடுமுறை நாட்களில் கூட தன் சொந்த செலவில் அருகிலுள்ள பழங்குடி இன மக்கள் குறவர் இன மக்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு அவர்களது குடிசை வீட்டிற்கே நேரடியாக தேடி சென்று மருத்துவ சேவை செய்து வருகிறார்.