டில்லி

ந்தியாவில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம்  ரூ.6 லட்சம் கோடி வருமானம் ஈட்ட  அரசு திட்டமிட்டுள்ளது.

மீண்டும் அமைந்துள்ள பாஜக அரசின் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  5 ஜி அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டு நடைபெறும் என தெரிவித்தார்.   ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முந்தைய அலைக்கற்றைகள் ஏலத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை.   இந்நிலையில் டிஜிடல் தொடர்பு ஆணையம் 5 ஜி தொழில்நுட்பத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன.   இதில் அரசு சேவை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம் டி என் எல் ஆகியவைகளும் அடங்கும்.   எனவே 5 ஜி சேவை தொடங்குவதன் மூலம் அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களும் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது  மூலம் மட்டுமே 5 ஜி ஏலம் சிறபாக அமையும் என்பதை அரசு அறிந்துள்ளது.   குறிப்பாக இந்த சேவை நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு மும்முரமாக உள்ளது.    அத்துடன் இதற்கான அனைத்து தொழில் நுட்பங்களையும் இந்தியாவில் மேம்படுத்துவதன் மூலம் சேவைகள் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் அமையும் எனவும் அரசு எண்ணுகிறது.

இந்த 5 ஜி தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு தனியார் பங்களிப்பு  அவசியம் என்பதால் விரைவில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற உள்ளது.   இந்த ஏலத்தின் மூலம் குறைந்தது ரூ.6 லட்சம் கோடி வருமானம் வரும் என அரசு எதிர்பார்க்கிறது.   அத்துடன் இந்த சேவை தொடங்கினால் கிராமப் புறங்களிலும் ஃபைபர் கேபிள்கள் மூலம் இணைய சேவை அளிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.