புதுடெல்லி:

காசநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான பாகுபாட்டை களைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


உலகிலேயே காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. 27 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் காசநோயால் 42 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.

இந்நிலையில், காசநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைய மத்திய அரசு கொள்கைத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

இந்த பாகுபாட்டை 2025-ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் படிப்படியாக அரசு மற்றும் தனியார் துறை தொடர்பான அனைத்து பணியிடங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

பணி இடங்கள் காற்றோட்டத்துடன் உள்ளனவா என இந்த திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்படும். காசநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஓய்வு தருவது, மருத்துவ சிகிச்சை, மருத்துவ விடுப்பு போன்றவை அளிக்கப்படுவதை உறுதி செய்யப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் காசநோய் பரவுவதை தடுக்க முடியும். இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் மத்திய தொழிலாளர் துறை செயலர் ஹீராலால் சமாரியா கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் காசநோய், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நோய் பரவாமல் தடுத்து புதிய சூழல் உருவாக்கப்படும்.

இந்தியாவில் 20 லட்சம் காசநோயாளிகள் புதிதாக உருவாவதாக உலக சுகாதார அமைப்பின் காசநோய் அறிக்கை தெரிவிக்கிறது.

2025-ம் ஆண்டுக்குள் உலக அளவில் காசநோயை 50% முதல் 75% வரை குறைப்பது எனவும், 2035-ல் காசநோயை முற்றிலும் ஒழிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.